Saturday, 2 April 2011

சகுனம்

      வேலைக்கு புறப்பட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து "கலா... தண்ணீ கொண்டுவா" என்றார் ராதாகிருஷ்ணன்.

      "என்னங்க,  இப்பதான தண்ணீ குடிச்சிட்டு போனிங்க" என்றாள்.

      "ஒண்ணுமில்ல, நம்ம பக்கத்துக்கு வீட்டு  தர்த்திரம் இருக்கே, அதான் புருஷன் இல்லாம விதவையா இருக்காளே சுசீலா, அவ எதிர்த்தாப்ல வந்தா அதனாலதான்" என்றார். தண்ணீரை குடித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டு போனார்.

      ராதா கிருஷ்ணன் எப்பவுமே இப்படிதான் எல்லாவற்றிற்கும்   சகுனம் பார்ப்பார்.

     மாலை ஒரு 5  மணி இருக்கும் ராதாகிஷ்ணனுடைய மொபைலுக்கு ஒரு போன் கால் வந்தது. பக்கத்துவீட்டு சுசீலா தான் பேசினாள். "ஹலோ ... நான் சுசீலா பேசுறேன். நீங்க உடனே கிளம்பி பெரிய ஆஸ்பத்திரிக்கு வரணும். உங்க பொண்ணுக்கு  அடிப்பட்டு ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்" என்றாள். 

      ராதாகிருஷ்ணன் பதறியடித்துகொண்டு  ஹாஸ்பிடல் வந்துசேர்ந்தார். 

      அவரது ஆசைமகள் கை காலெல்லாம் அடிபட்டு கிடந்தாள். மருத்துவர் கட்டுபோட்டுகொண்டிருந்தார்.

       "ஐயோ கடவுளே, இப்படி அடிபட்டிருக்கேமா, எப்படிமா ஆச்சு? உன்ன யாரு இங்க கொண்டுவந்து சேர்த்தா?" என்றார். 

       "நான்  ஸ்கூல் விட்டு வரும் போது ஒரு வண்டி என்னை இடுச்சு தள்ளி விட்டுட்டு போயிடுச்சிப்பா. சுசீலா ஆன்டி தான் என்ன இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க" என்றாள்.

      "நல்லா இருந்த உனக்கு இப்படி தீடிர்னு அடிப்படிருக்கேமா, காலையில   நீ ஸ்கூல் போகும் போது எதிர்த்தாப்ல யாருமா வந்தா என்றார் சுசீலாவை பார்த்து முறைத்துகொண்டே 

      "நீங்க  தான்பா வந்தீங்க" என்றாள் அவருடைய மகள் மிகவும் நிதானமாக.
     

     

    

2 comments: