Friday 29 October, 2010

பஞ்சாயத்து

கிராமத்திற்கே  உரித்தான அந்த பெரிய ஆலமரத்தடியில் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார். பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டி. ஊர் மக்கள் அனைவரும் அங்கே கூடி நின்றார்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி ராஜனும், தாழ்ந்த இனத்தை சேர்ந்த சரசுவும் காதலித்து விட்டார்கள். அதற்காகதான் இப்பொழுது பஞ்சாயத்து கூடியிருக்கிறார்கள் .

      சரசு ஒரு புறம் நின்று அழுதுகொண்டிருக்க அவளுக்கு எதிர்புறம் ராஜன் தலைகுனித்து நின்றுகொண்டிருதான்.

     " நீங்க இரண்டு பேரும் காதல் செய்த குற்றத்திற்காக, ராஜன் குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம். சரசு குடும்பத்தாரும் இனி ஊர் எல்லைக்குள் வரக்கூடாது". என தீர்ப்பு வழங்கி விட்டு கம்பீரமாய் நடந்து சென்றார். வீரபாண்டி. 

      வீட்டிற்கு சென்றவர் தன் மனைவி கொடுத்த காபியை சுவைத்துக் குடித்துகொண்டிருந்தார். அப்பொழுது எதார்த்தமாய்  நிமிர்ந்தவரின் கண்கள் வாசல்பக்கம் சென்று அப்படியே  நிலைக்குத்தி நின்றது.    வீரபாண்டி அப்படியே ஸ்தம்பித்து போய்விட்டார்.

     இருக்காதா   பின்னே , தன்னுடைய ஒரே ஆசை மகன் மற்றும் அன்பு மகனான ராஜுவும்,
தாழ்ந்த இனத்தை சேர்ந்த பெண்ணான மல்லிகாவும், மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில்  உள்ளே வர பயந்து வாசலில் நின்று கொண்டிருந்தர்கள்.