Saturday 2 April, 2011

சகுனம்

      வேலைக்கு புறப்பட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து "கலா... தண்ணீ கொண்டுவா" என்றார் ராதாகிருஷ்ணன்.

      "என்னங்க,  இப்பதான தண்ணீ குடிச்சிட்டு போனிங்க" என்றாள்.

      "ஒண்ணுமில்ல, நம்ம பக்கத்துக்கு வீட்டு  தர்த்திரம் இருக்கே, அதான் புருஷன் இல்லாம விதவையா இருக்காளே சுசீலா, அவ எதிர்த்தாப்ல வந்தா அதனாலதான்" என்றார். தண்ணீரை குடித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டு போனார்.

      ராதா கிருஷ்ணன் எப்பவுமே இப்படிதான் எல்லாவற்றிற்கும்   சகுனம் பார்ப்பார்.

     மாலை ஒரு 5  மணி இருக்கும் ராதாகிஷ்ணனுடைய மொபைலுக்கு ஒரு போன் கால் வந்தது. பக்கத்துவீட்டு சுசீலா தான் பேசினாள். "ஹலோ ... நான் சுசீலா பேசுறேன். நீங்க உடனே கிளம்பி பெரிய ஆஸ்பத்திரிக்கு வரணும். உங்க பொண்ணுக்கு  அடிப்பட்டு ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்" என்றாள். 

      ராதாகிருஷ்ணன் பதறியடித்துகொண்டு  ஹாஸ்பிடல் வந்துசேர்ந்தார். 

      அவரது ஆசைமகள் கை காலெல்லாம் அடிபட்டு கிடந்தாள். மருத்துவர் கட்டுபோட்டுகொண்டிருந்தார்.

       "ஐயோ கடவுளே, இப்படி அடிபட்டிருக்கேமா, எப்படிமா ஆச்சு? உன்ன யாரு இங்க கொண்டுவந்து சேர்த்தா?" என்றார். 

       "நான்  ஸ்கூல் விட்டு வரும் போது ஒரு வண்டி என்னை இடுச்சு தள்ளி விட்டுட்டு போயிடுச்சிப்பா. சுசீலா ஆன்டி தான் என்ன இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க" என்றாள்.

      "நல்லா இருந்த உனக்கு இப்படி தீடிர்னு அடிப்படிருக்கேமா, காலையில   நீ ஸ்கூல் போகும் போது எதிர்த்தாப்ல யாருமா வந்தா என்றார் சுசீலாவை பார்த்து முறைத்துகொண்டே 

      "நீங்க  தான்பா வந்தீங்க" என்றாள் அவருடைய மகள் மிகவும் நிதானமாக.
     

     

    

Friday 1 April, 2011

தொழில்

      "அம்மாடி கவிதா ... பாப்பாவ கொஞ்சம் பிடி, நான் போய் சாதம் வெந்துட்டானு பார்த்துட்டு வரேன்" என்றாள் மங்களம்.

     "ஐயோ என்னால பிடிக்க முடியாது, அங்க பாருங்க அவளுக்கு எப்படி மூக்கு ஒழுகுதுன்னு,  நான் வேற குளிச்சிட்டு டியூட்டிக்கு போக டிரஸ் எல்லாம் மாத்திட்டேன், நான் தூக்க மாட்டேன்பா" என்றாள். 

     "அவள் எப்போதும் ஆசையாய் தூக்கி கொஞ்சும் அவளது அக்கா குழந்தைதான்  அது. ஆனால் இன்று அந்த குழந்தைக்கு சளி பிடித்துக்கொண்டு மூக்கு ஒழுகுகிறது, அதனால் தான் குழந்தையை  தூக்க மாட்டேன் என்கிறாள் அவள். 

     அவள் அப்படித்தான் எல்லாவற்றிற்கும்  சுத்தம் பார்ப்பாள். குழந்தை டாய்லெட்  போய்விட்டால் கூட அவ்வளவுதான் சிறிது நேரத்திற்கு அந்த பக்கமே வரமாட்டாள். ஐயோ எனக்கு வாமிட் வரமாதிரி இருக்கு, வயிற்றை குமட்டுது  என சாப்பிடாமல் ஓடி விடுவாள்.

     "சரிம்மா எனக்கு டயம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன்" என்று கடைசிவரைக்கும் குழந்தையை தூக்காமல்  புறப்பட்டுவிட்டாள்.

     மருத்துவமனைக்கு  வந்ததும் கலர் ஆடையிலிருந்து வெள்ளை நிற 
யூனிபார்முக்கு  மாறினாள். இன்று அவளுக்கு குழந்தைகள் வார்டுல டியூட்டி உள்ளே நுழைந்ததுமே  ஒரு ஏழு வயது குழந்தை நெஞ்சை பிடித்துகொண்டு வாமிட் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. அருகில் குழந்தையின் அம்மாவும் இல்லை. கவிதா உள்ளே நுழைந்த நேரம் அந்த குழந்தை வாமிட் எடுக்க ஆரம்பித்தது. கவிதா ஓடி போய்  அவளது இரு கைகளையும் ஏந்தினாள் அந்த குழந்தை வாமிட் எடுக்க.