Saturday, 2 April 2011

சகுனம்

      வேலைக்கு புறப்பட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து "கலா... தண்ணீ கொண்டுவா" என்றார் ராதாகிருஷ்ணன்.

      "என்னங்க,  இப்பதான தண்ணீ குடிச்சிட்டு போனிங்க" என்றாள்.

      "ஒண்ணுமில்ல, நம்ம பக்கத்துக்கு வீட்டு  தர்த்திரம் இருக்கே, அதான் புருஷன் இல்லாம விதவையா இருக்காளே சுசீலா, அவ எதிர்த்தாப்ல வந்தா அதனாலதான்" என்றார். தண்ணீரை குடித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டு போனார்.

      ராதா கிருஷ்ணன் எப்பவுமே இப்படிதான் எல்லாவற்றிற்கும்   சகுனம் பார்ப்பார்.

     மாலை ஒரு 5  மணி இருக்கும் ராதாகிஷ்ணனுடைய மொபைலுக்கு ஒரு போன் கால் வந்தது. பக்கத்துவீட்டு சுசீலா தான் பேசினாள். "ஹலோ ... நான் சுசீலா பேசுறேன். நீங்க உடனே கிளம்பி பெரிய ஆஸ்பத்திரிக்கு வரணும். உங்க பொண்ணுக்கு  அடிப்பட்டு ஆஸ்பத்திரில சேர்த்திருக்கோம்" என்றாள். 

      ராதாகிருஷ்ணன் பதறியடித்துகொண்டு  ஹாஸ்பிடல் வந்துசேர்ந்தார். 

      அவரது ஆசைமகள் கை காலெல்லாம் அடிபட்டு கிடந்தாள். மருத்துவர் கட்டுபோட்டுகொண்டிருந்தார்.

       "ஐயோ கடவுளே, இப்படி அடிபட்டிருக்கேமா, எப்படிமா ஆச்சு? உன்ன யாரு இங்க கொண்டுவந்து சேர்த்தா?" என்றார். 

       "நான்  ஸ்கூல் விட்டு வரும் போது ஒரு வண்டி என்னை இடுச்சு தள்ளி விட்டுட்டு போயிடுச்சிப்பா. சுசீலா ஆன்டி தான் என்ன இங்க கொண்டு வந்து சேர்த்தாங்க" என்றாள்.

      "நல்லா இருந்த உனக்கு இப்படி தீடிர்னு அடிப்படிருக்கேமா, காலையில   நீ ஸ்கூல் போகும் போது எதிர்த்தாப்ல யாருமா வந்தா என்றார் சுசீலாவை பார்த்து முறைத்துகொண்டே 

      "நீங்க  தான்பா வந்தீங்க" என்றாள் அவருடைய மகள் மிகவும் நிதானமாக.
     

     

    

Friday, 1 April 2011

தொழில்

      "அம்மாடி கவிதா ... பாப்பாவ கொஞ்சம் பிடி, நான் போய் சாதம் வெந்துட்டானு பார்த்துட்டு வரேன்" என்றாள் மங்களம்.

     "ஐயோ என்னால பிடிக்க முடியாது, அங்க பாருங்க அவளுக்கு எப்படி மூக்கு ஒழுகுதுன்னு,  நான் வேற குளிச்சிட்டு டியூட்டிக்கு போக டிரஸ் எல்லாம் மாத்திட்டேன், நான் தூக்க மாட்டேன்பா" என்றாள். 

     "அவள் எப்போதும் ஆசையாய் தூக்கி கொஞ்சும் அவளது அக்கா குழந்தைதான்  அது. ஆனால் இன்று அந்த குழந்தைக்கு சளி பிடித்துக்கொண்டு மூக்கு ஒழுகுகிறது, அதனால் தான் குழந்தையை  தூக்க மாட்டேன் என்கிறாள் அவள். 

     அவள் அப்படித்தான் எல்லாவற்றிற்கும்  சுத்தம் பார்ப்பாள். குழந்தை டாய்லெட்  போய்விட்டால் கூட அவ்வளவுதான் சிறிது நேரத்திற்கு அந்த பக்கமே வரமாட்டாள். ஐயோ எனக்கு வாமிட் வரமாதிரி இருக்கு, வயிற்றை குமட்டுது  என சாப்பிடாமல் ஓடி விடுவாள்.

     "சரிம்மா எனக்கு டயம் ஆயிடுச்சு, நான் கிளம்புறேன்" என்று கடைசிவரைக்கும் குழந்தையை தூக்காமல்  புறப்பட்டுவிட்டாள்.

     மருத்துவமனைக்கு  வந்ததும் கலர் ஆடையிலிருந்து வெள்ளை நிற 
யூனிபார்முக்கு  மாறினாள். இன்று அவளுக்கு குழந்தைகள் வார்டுல டியூட்டி உள்ளே நுழைந்ததுமே  ஒரு ஏழு வயது குழந்தை நெஞ்சை பிடித்துகொண்டு வாமிட் எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. அருகில் குழந்தையின் அம்மாவும் இல்லை. கவிதா உள்ளே நுழைந்த நேரம் அந்த குழந்தை வாமிட் எடுக்க ஆரம்பித்தது. கவிதா ஓடி போய்  அவளது இரு கைகளையும் ஏந்தினாள் அந்த குழந்தை வாமிட் எடுக்க.
      


Thursday, 31 March 2011

ஆல்பம்

      அழகாக சுருள் சுருளாக கருமையான தலைமுடி. அப்படி ஒரு அடர்ந்த தலைமுடி. மீசை லேசாக அரும்பிய முகம்.  கலையான முகம் முழுவதும் புன்னகை ஒளிந்திருந்தது. லேசாக சிரித்தால் கூட குழி விழும் கன்னம். சிரிக்கும் போது அழகாக  வரிசையாய் தெரிந்த முத்து போன்ற பற்கள். இளமை ததும்பும் வாலிப உடம்பு. பார்பதற்கு யாரோ ஒரு சிறு வயது  நடிகரை ஞாபகபடுத்தியது.

     வாலிப பருவத்தில் எடுத்த தன்னுடைய போட்டோ ஆல்பத்தை ஆசையாய் பார்த்துகொண்டிருந்தார் வழுக்கை தலையும் கன்னத்தில் டொக் விழுந்து பல்லு போன கிழவருமான 70 வயது தாத்தா. 

Wednesday, 30 March 2011

துப்பட்டா

     ராஜா வழக்கம் போலவே இன்றும் சரியாக காலை ஏழு மணிக்கு தெரு முனையில் இருக்கும்  டீ கடைக்கு வந்துவிட்டான். 

     சுபா 7 .15 க்கு  அந்த டீ கடையை கடந்து போவாள்.

     இன்று எப்படியாவது சுபாவிடம் மனதில் உள்ளதை சொல்லிவிட வேண்டும் என்று அவளிடம் சொல்ல வேண்டியதை மனதில் சொல்லி ஒத்திகை பார்த்து கொண்டான் ராஜா.
     
    சுபா ஒரு  பத்து அடி துரத்தில் வைலெட் நிற ஸ்கூட்டியில் மஞ்சள் சுடிதார் அணிந்து மஞ்சள் தேவதையாய் வந்துகொண்டிருந்தாள்.

      அவள் டீ கடையை கடக்கும் நேரத்தில் ராஜா தனது வலது கையை நீட்டி அவளை வழி மறித்தான்.

      அவளும்  ஸ்கூட்டியை  நிறுத்திவிட்டு என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி தனது கூர்மையான விழிகளால் பார்த்தாள்.

     "உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும், நீங்க  ரொம்ப அழகா இருக்கீங்க. ரொம்ப அழகா டிரஸ் பண்றீங்க.  ஆனா  உங்க துப்பட்டாவ மட்டும் காத்துல இப்படி பறக்க விட்டுட்டு போறீங்க. அது சில சமயம் உங்க ஸ்கூட்டி வீல்ல கூட படுது. இது ரொம்ப ஆபத்துங்க. இனிமே இப்படி போகாதிங்க. என் தங்கச்சி கூட இப்படி தான் துப்பட்டாவ  போட்டுக்கிட்டு போவா.  ஒரு நாள், அவ துப்பட்டா வண்டி வீல்ல  மாட்டி நடு ரோட்ல தடுக்கி விழுந்து எதிரே வந்த லாரில  அடிபட்டு... அதற்கு மேல் சொல்ல முடியாமல் அழுகை அவன் தொண்டையை அடைத்தது. 

     அவள் எல்லாம் புரிந்தவளாய் கண்களால்  நன்றி சொல்லிவிட்டு துப்பட்டாவை எடுத்து முன் பக்கம் முடிச்சு போட்டு கொண்டு புறப்பட்டாள்.

Tuesday, 29 March 2011

பரிசு

       அந்த சட்டைய பார்த்ததுமே எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடுச்சு. பல கடைகள் ஏறி இறங்கி பார்த்து பார்த்து வாங்கிய சட்டை கரித்துணியை  போல் கேவலமாய் ஒரு ஓரத்தில் கிடந்தது. 

        என் தோழியினுடைய குழந்தையின் முதல் பிறந்தநாளுக்கு நான் பரிசாக கொடுத்த சட்டை. பிறந்தநாள் முடிந்து முழுமையாக இரண்டு மாதம் கூட முடியவில்லை. அதற்குள் அந்த சட்டைக்கு இந்த நிலைமை. 

      பிறந்தநாள் அன்று இங்கு வந்ததுதான்,  மறுபடியும் இன்று தான் அவளுடைய வீட்டுக்கு வந்திருக்கிறேன். அந்த சட்டையை பார்க்கும் போது ஏன்டா நாம இந்த சட்டைய பரிசாக கொடுத்தோம், ஏன்டா இந்த வீட்டுக்கு வந்தோம் என்பது போல இருந்தது. ஒரு வேளை அவள் நம்மை மதிக்கவில்லையோ என தோன்றியது எனக்கு.

    என்னுடைய தோழி உள்ளே எனக்காக காபி போட்டுகொண்டிருந்தாள். அவள் வெளியே வரட்டும்.  என நினைத்துகொண்டிருந்தேன். 

      ஆனால் அவள் வெளியே வரும் போதே," என்னடி,  அந்த சட்டையையே பாத்துகிட்டிருக்க. அது நீ வாங்கிட்டு வந்த சட்டைதான். அந்த சட்டைய எல்லோருக்கும் பிடித்திருந்தது தெரியுமா? பாப்பாவ  எங்க தூக்கிகிட்டு போறதா இருந்தாலும் இந்த சட்டயதான்  நான் போட்டுவிடுவேன். எங்க வீட்டுககாரர்க்கு  கூட இந்த சட்டைய ரொம்ப பிடிக்கும். எப்ப பார்த்தாலும் இந்த சட்டைய போட்டு போட்டு வீணா போயிட்டு, ஆனாலும் தூக்கிபோட மனசு வரல. அதான் எடுத்து வச்சிருக்கேன்". என்றாள்.

      இப்போது என்னுடைய உள்மனசு அவளை மனதிற்குள் திட்டியதற்காக   மானசீகமாக என் தோழியிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தது.

    
    

முதியோர் இல்லம்

      "என்னை இங்கே விட்டுட்டு போகதடா, நான் வீட்டுலேயே ஒரு ஓரமா இருந்துக்கிறேன். உன் பொண்டாட்டி என்ன சொல்றாளோ அத கேட்டுகிட்டு, அவ குடுக்கிறத சாப்பிட்டுகிட்டு வீட்டுலேயே இருந்துகிறேன்டா செல்வா. என்னை  முதியோர் இல்லத்துல விட்டுட்டு போகதடா. என்னால இங்க இருக்க முடியாது. என் பேரபிள்ளைகள பாக்காம என்னால இருக்க முடியாதுடா".  என  புலம்பிய தன் தந்தையின் அழுகுரல் இன்று காலையிலிருந்து,  இன்று காலையில் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் செல்வத்தின் காதில் ஒலித்துகொண்டே இருந்தது.

Saturday, 26 March 2011

சிகரெட்

      "ராமையா, நீங்க சிகரெட் பிடிக்கிறத நிறுத்தினாதான் உங்க உயிரை காப்பாற்ற முடியும். நீங்க பிடிக்கிற சிகரெட் இப்பவே உங்க நுரையீரல பாதி அரிச்சிடுச்சு.  நீங்க சிகரெட் பிடிக்கிறத நிறுத்தாம மருந்து மாத்திரை சாப்பிடுறதுல ஒரு பிரயோஜனமும் இல்ல. உங்க குடும்பத்த கொஞ்சம் நினைச்சு பாருங்க ராமையா, உங்கள நம்பி மூணு குழந்தைங்க இருக்காங்க. சிகரெட் பிடிக்கிறது உடம்புக்கு கெடுதல்னு உங்களுக்கு தெரியாதா?" என்று ராமையா என்ற தன்னுடைய நோயாளியை  திட்டிக்கொண்டிருந்தார். டாக்டர் சுந்தரம். 

      அதே சமயம் டாக்டர் சுந்தரம் அவர்களின் அறையை சுத்தம் செய்துகொண்டிருந்த அவரது வீட்டு வேலைக்கார பெண்மணி டாக்டரின் அறையிலிருந்து பத்து பதினைந்து  சிகரெட் அட்டை பெட்டிகளை  " ச்சே எவ்ளோ சிகரெட் பெட்டிகளை குவிச்சு வச்சிருக்காரு மனுஷன்" என திட்டிக்கொண்டே  அவற்றை அள்ளி கொண்டிருந்தாள்.

Friday, 25 March 2011

மழை


     "என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்ற பாடல் வரியை மழையை பார்த்ததும் உதடுகள் தானாகவே முணுமுணுக்க ஆரம்பித்தது காருக்குள் அமர்ந்திருந்த ஜானுவுக்கு.
     "என்ன ஜானு மழையை பார்த்ததும் பாட்டெல்லாம் தான வருது போல" என்றான் காரை ஓட்டியபடியே ஜானுவின் கணவன் மனோ. 
   "ஆமாங்க எனக்கு மழைனா ரொம்ப பிடிக்கும். அதுவும் கார்ல உட்கார்ந்துகிட்டு  மழைய ரசிக்கிறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?  என்றாள்.
     "ஆமாம் உன்ன மாதிரியே நம்ம குழந்தையும் மழைய எப்படி வேடிக்க பார்த்துட்டு வாரானு பாரேன், மழைய யாருக்குத்தான் பிடிக்காது?" என்றான்.
     "என்னங்க காரை இன்னும் கொஞ்சம் வேகமா ஓட்டுறீங்களா? மழை தண்ணீ  காரோட ரெண்டு பக்கமும் சீறியடிக்கும் போது ரொம்ப அழகா இருக்கும். ப்ளீஸ், ப்ளீஸ் காரை  கொஞ்சம் வேகமா ஒட்டுங்க" என்றாள்.
     மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக காரின் வேகத்தை அதிகபடுத்தினான். மனோ.
     மழை நீர் காரின் இருபுறமும் சீறியடித்தது. அதை பார்த்து மனைவியும் குழந்தையும் கைதட்டி சிரிப்பதை ரசித்தவன் சாலையின் ஓரமாய் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமி மேல் அவனுடைய கார் சகதியை வாரியடித்ததை அவன் கவனிக்கவில்லை. 
       வெள்ளை சட்டையும், நீல பாவாடையும் அணிந்து கொண்டு மழைக்கு பிடித்துகொள்வதற்கு குடை கூட இல்லாமல்  ஒரு பிளாஸ்டிக் பையை தலையில் மாட்டிகொண்டு  பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த  அந்த சிறுமியின் மேல் முழுவதும் சேர் அடித்திருந்தது. அந்த குழந்தை செய்வதறியாது அழ ஆரம்பித்தது.
     இப்போது பள்ளிக்கு  செல்லாமல் அந்த சிறுமி வீட்டிற்கு புறப்பட்டாள்.
    வீட்டிற்குள்  நுழைந்ததும் அந்த சிறுமியின் தாய் "ஏண்டி பள்ளிகூடத்துக்கு போகாம திரும்பி வந்துட்ட"  என்றாள்.
     "அம்மா ஒரு காரு எம்மேல சேற அடிசிட்டுமா" என்றாள் அந்த சிறுமி அழுதுகொண்டே.
       "ஏண்டி சனியனே பார்த்து போக கூடாது. வீட்டுல ஒரு எடம் பாக்கி இல்லாம மழை கூரைய பொத்துகிட்டு  ஒழுவுது. இங்க ஒட்கார எடம் இல்லாம தான உன்ன பள்ளிக்குடத்துக்கு அனுப்பி வச்சேன். இப்படி திரும்பி வந்து நிக்கிற. என அந்த சிறுமியை திட்டினாள்.
     மழை தொடர்ந்து பெய்றதுனால ரோட்ல பழகடை போட முடியாம அந்தாளு வேற வீட்ல உட்கார்திருக்கார். மதியான சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியலையே. இந்த சனியா பிடிச்ச மழை எப்ப நிக்க போகுதுன்னு தெரியலையே என்று மழையை தொடர்ந்து திட்டிகொண்டிருந்தாள்.



Tuesday, 22 March 2011

தூய்மை

தன் கணவனுக்கு பிடித்த தக்காளி சட்னி செய்வதற்காக, தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் ஆகியவற்றை நன்றாக கழுவி அவற்றை நன்றாக தூய்மை செய்யப்பட்ட ஒரு தட்டில் வைத்து நறுக்கி கொண்டிருந்தாள் அனு.

இட்லி குக்கரில் இட்லி  வெந்து கொண்டிருந்தது. இன்னும் பத்து நிமிடத்தில் டிபன் ரெடியாகிவிடும்.

ஆனால் அதற்குள் பாஸ்கர் குளித்துவிட்டு வந்துவிட்டான்.

"அனு .......... சமையல் முடிந்துவிட்டதா? ஆபீஸ்க்கு நேரம் ஆயிட்டு" என்றான்.

"இன்னும் இல்லங்க, கொஞ்ச நேரம் பொறுங்க" என்றாள்.

"என்னைக்கு தாண்டீ, நீ சீக்கிரம் சமச்சிருக்க? நீயும் உன் சாப்பாடும் நீயே  கொட்டிக்க. நான் கடைல சாப்பிட்டுகிறேன்". என்று சொல்லிக்கொண்டே தலையை  சீவியவன் ,  சட்டையை போட்டுகொண்டு கிளம்பிவிட்டான். 

ஹோட்டலுக்கு  போய் இரண்டு தோசை ஆர்டர் செய்தான்.

வாயில் குதப்பிய வெற்றிலை பாக்கு எச்சில் தெறிக்க தெறிக்க பேசிக்கொண்டே  தோசை வார்த்துகொண்டிருந்தார். அந்த ஹோட்டல் சமையல்காரர்.

அவர் சுட்ட தோசையை கழுவாத ஒரு தட்டில் தூய்மை செய்யப்படாத ஒரு இலையை வைத்து தலையை சொறிந்துகொண்டே ஒரு தோசையை எடுத்து 
வைத்து பாஸ்கரிடம் கொடுத்தான். உணவு பரிமாறுபவன்.

பாஸ்கர் அதை சுவைத்து சாப்பிட்டான். மதியமும் ஹோட்டலில் தான் சாப்பிடவேண்டும். வீட்டிற்கு போககூடாது  அப்ப தான் அவளுக்கு புத்தி வரும். என நினைத்துகொண்டான்.

அங்கே வீட்டில் அவனது மனைவி மதிய உணவிற்காக ஏற்பாடு செய்துகொண்டிருந்தாள். கணவனுக்கு பிடித்த சாம்பாரும், உருளைகிழங்கு வறுவலும் செய்வதற்காக காய்கறிகளை தூய்மையாக கழுவி நன்றாக அலசிய தட்டில் எடுத்து வைத்துகொண்டிருந்தாள். 

Friday, 29 October 2010

பஞ்சாயத்து

கிராமத்திற்கே  உரித்தான அந்த பெரிய ஆலமரத்தடியில் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார். பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டி. ஊர் மக்கள் அனைவரும் அங்கே கூடி நின்றார்கள். ஊர் கட்டுப்பாட்டை மீறி ராஜனும், தாழ்ந்த இனத்தை சேர்ந்த சரசுவும் காதலித்து விட்டார்கள். அதற்காகதான் இப்பொழுது பஞ்சாயத்து கூடியிருக்கிறார்கள் .

      சரசு ஒரு புறம் நின்று அழுதுகொண்டிருக்க அவளுக்கு எதிர்புறம் ராஜன் தலைகுனித்து நின்றுகொண்டிருதான்.

     " நீங்க இரண்டு பேரும் காதல் செய்த குற்றத்திற்காக, ராஜன் குடும்பத்தாரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம். சரசு குடும்பத்தாரும் இனி ஊர் எல்லைக்குள் வரக்கூடாது". என தீர்ப்பு வழங்கி விட்டு கம்பீரமாய் நடந்து சென்றார். வீரபாண்டி. 

      வீட்டிற்கு சென்றவர் தன் மனைவி கொடுத்த காபியை சுவைத்துக் குடித்துகொண்டிருந்தார். அப்பொழுது எதார்த்தமாய்  நிமிர்ந்தவரின் கண்கள் வாசல்பக்கம் சென்று அப்படியே  நிலைக்குத்தி நின்றது.    வீரபாண்டி அப்படியே ஸ்தம்பித்து போய்விட்டார்.

     இருக்காதா   பின்னே , தன்னுடைய ஒரே ஆசை மகன் மற்றும் அன்பு மகனான ராஜுவும்,
தாழ்ந்த இனத்தை சேர்ந்த பெண்ணான மல்லிகாவும், மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில்  உள்ளே வர பயந்து வாசலில் நின்று கொண்டிருந்தர்கள்.