Friday 25 March, 2011

மழை


     "என் மேல் விழுந்த மழை துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்" என்ற பாடல் வரியை மழையை பார்த்ததும் உதடுகள் தானாகவே முணுமுணுக்க ஆரம்பித்தது காருக்குள் அமர்ந்திருந்த ஜானுவுக்கு.
     "என்ன ஜானு மழையை பார்த்ததும் பாட்டெல்லாம் தான வருது போல" என்றான் காரை ஓட்டியபடியே ஜானுவின் கணவன் மனோ. 
   "ஆமாங்க எனக்கு மழைனா ரொம்ப பிடிக்கும். அதுவும் கார்ல உட்கார்ந்துகிட்டு  மழைய ரசிக்கிறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?  என்றாள்.
     "ஆமாம் உன்ன மாதிரியே நம்ம குழந்தையும் மழைய எப்படி வேடிக்க பார்த்துட்டு வாரானு பாரேன், மழைய யாருக்குத்தான் பிடிக்காது?" என்றான்.
     "என்னங்க காரை இன்னும் கொஞ்சம் வேகமா ஓட்டுறீங்களா? மழை தண்ணீ  காரோட ரெண்டு பக்கமும் சீறியடிக்கும் போது ரொம்ப அழகா இருக்கும். ப்ளீஸ், ப்ளீஸ் காரை  கொஞ்சம் வேகமா ஒட்டுங்க" என்றாள்.
     மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக காரின் வேகத்தை அதிகபடுத்தினான். மனோ.
     மழை நீர் காரின் இருபுறமும் சீறியடித்தது. அதை பார்த்து மனைவியும் குழந்தையும் கைதட்டி சிரிப்பதை ரசித்தவன் சாலையின் ஓரமாய் சென்று கொண்டிருந்த ஒரு சிறுமி மேல் அவனுடைய கார் சகதியை வாரியடித்ததை அவன் கவனிக்கவில்லை. 
       வெள்ளை சட்டையும், நீல பாவாடையும் அணிந்து கொண்டு மழைக்கு பிடித்துகொள்வதற்கு குடை கூட இல்லாமல்  ஒரு பிளாஸ்டிக் பையை தலையில் மாட்டிகொண்டு  பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த  அந்த சிறுமியின் மேல் முழுவதும் சேர் அடித்திருந்தது. அந்த குழந்தை செய்வதறியாது அழ ஆரம்பித்தது.
     இப்போது பள்ளிக்கு  செல்லாமல் அந்த சிறுமி வீட்டிற்கு புறப்பட்டாள்.
    வீட்டிற்குள்  நுழைந்ததும் அந்த சிறுமியின் தாய் "ஏண்டி பள்ளிகூடத்துக்கு போகாம திரும்பி வந்துட்ட"  என்றாள்.
     "அம்மா ஒரு காரு எம்மேல சேற அடிசிட்டுமா" என்றாள் அந்த சிறுமி அழுதுகொண்டே.
       "ஏண்டி சனியனே பார்த்து போக கூடாது. வீட்டுல ஒரு எடம் பாக்கி இல்லாம மழை கூரைய பொத்துகிட்டு  ஒழுவுது. இங்க ஒட்கார எடம் இல்லாம தான உன்ன பள்ளிக்குடத்துக்கு அனுப்பி வச்சேன். இப்படி திரும்பி வந்து நிக்கிற. என அந்த சிறுமியை திட்டினாள்.
     மழை தொடர்ந்து பெய்றதுனால ரோட்ல பழகடை போட முடியாம அந்தாளு வேற வீட்ல உட்கார்திருக்கார். மதியான சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு தெரியலையே. இந்த சனியா பிடிச்ச மழை எப்ப நிக்க போகுதுன்னு தெரியலையே என்று மழையை தொடர்ந்து திட்டிகொண்டிருந்தாள்.



2 comments:

  1. மழை மக்களை எப்படி எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது இக்கதை. அதுவும் ஏழை மக்கள் மழையால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை யாரும் யோசிப்பதே இல்லை

    ReplyDelete